50 ஆண்டு கால சமஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி : திருகோணமலை பிரகடனம் தொடர்பில் ஶ்ரீ ஞானேஸ்வரனின் தகவல்
ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் பொங்கு தமிழ் பிரகடனங்களுக்குப் பிறகு, ஒரு தீர்க்கமான அரசியல் நகர்வாக பலராலும் நோக்கப்படும் “திருகோணமலை பிரகடனம்” ஏன் தமிழ் அரசியல்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது அது ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த போராட்டத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பில் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் இணைப்பாளர் கலாநிதி ஶ்ரீ ஞானேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1977ஆம் ஆண்டுக்கு முன் முன்வைக்கப்பட்ட சமஷ்டி கோரிக்கைகளை 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே வடிவில் சுமந்து திரிவதைக் காட்டிலும், தற்போதைய சர்வதேசச் சூழலுக்கு ஏற்ப தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கச் செய்வதே இந்த பிரகடனத்தின் முதன்மை இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் சூழலில் வடக்கு கிழக்கு மக்கள் பாரம்பரியத் தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து, சிங்கள தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் பின்னணியிலுள்ள ஏமாற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்த் தலைமைத்துவங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.