வைத்தியர் சாபி பொதுப் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு
விசேட வைத்திய நிபுணர் சாபி சிஹாப்தீன் இன்று பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
சமூகத்தில் நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கத்துடன் போலியான ஆவணங்களைத் தயாரித்து, தம்மை கைது செய்ததுடன் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியமை குறித்து விசாரணை நடத்தக் கோரி, அவர் முறைப்பாட்டை செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பின்னர், அமைச்சகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சாபி, கடந்த ஐந்து வருடங்கள் மற்றும் ஆறு மாத காலப்பகுதியில் தான் மிகுந்த வேதனையை எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.
நீதவான் உத்தரவு
இந்தநிலையில், தாம் அனைத்து குற்றங்களிலும் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது தாம் மட்டுமல்ல, நீதிக்காக நின்றவர்கள் அனைவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவ்வாறான அநீதியை வேறு யாரும் சந்திக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை தமக்கு இருக்கிறது என்று சாபி தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சை செய்தமை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் வைத்திய கலாநிதி சாபி நேற்று அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கை முன்னெடுப்பதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து அது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதிவாதியை விடுவிக்குமாறு குருநாகல் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |