சிகிச்சைக்காக மட்டும் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலைக்கு செல்லலாம்! தொடரும் தடைகள்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna), யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார் என்று யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
வைத்திசாலைக்குள் உள்நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். போதனா வைத்தியசாலையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் அனுமதி
இந்தநிலையில், குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும், நோயாளர் என்பதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைய வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர் என்பதைத் தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்நுழைய முற்பட்டால், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.