அர்ச்சுனாவிற்கு எதிராக போராட்டம்: கிழக்கிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (R. Archuna) எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முகநூல் பதிவு
மேலும், அவருக்கெதிராக இந்து சமய கலாசார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், "இராமநாதன் அர்ச்சுனா, பயன்படுத்துகின்ற வார்த்தைகள், சைவக்குருமார்கள், இந்துக்குருமார்கள் அனைவரையும் தாக்கக் கூடிய அளவிற்கு உள்ளன.
ஆகவே, எமது புனிதமான திருநீற்றையும் அதனை அணிகின்ற சைவ மக்களையும், குறிப்பாக "அங்கு ஒருவன் இருப்பான்" என்று சுட்டிக் காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை மூலம் எங்களுடைய குருமார்களை தாக்கி அவர் பேசுகின்றார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
எனவே, இவ்வாறான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துபவருக்கு எதிராக இலங்கைச் சட்டத்தின்படி சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உரிய நடவடிக்கை
அத்துடன், அவர் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பேசுகின்ற இவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்கள் கவலைப்படுவர். எனவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளை பேசுவதை நிறுத்த வேண்டும்.

இதேபோன்று, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்த்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாக பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது சம்பந்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியோ, இந்து கலாசார அமைச்சோ அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள், சைவ அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடிக் கொண்டிருப்போம் என்பதை சகலருக்கும் அறியத் தருகின்றோம்" என குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        