நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம் - டக்ளஸ்
ஒருவருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம் எனவும் அந்த சிறப்பான அனுபவம் எம்மிடம் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (11.10.2024) சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஒருவருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம். அந்த சிறப்பான அனுபவம் எம்மிடம் இருக்கின்றது.
நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம்
தற்போது மாற்றம் என்ற கருப்பொருளை மையப்படுத்தியே அநேகமானோர் பரப்புரைகள் செய்கின்றனர். குறிப்பாக மக்கள் விரும்பும் மாற்றம் என்பது அரசியல் மாற்றமாகவே இருக்கின்றது. அந்த மாற்றம் தற்போது மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்த மாற்றம் வரவுள்ளதாக கணிக்கப்படுகின்றது.
தேசிய நல்லிணக்கம்
இதேவேளை எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈபிடிபியின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என நம்புகின்றேன்.
அத்துடன் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |