டக்ளஸின் கைது அநீதியானது : பாட்டலியின் நியாயப்படுத்தல்...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தது தவறான நடைமுறையாகும்.அத்தோடு அநீதியானது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், துப்பாக்கி பாவனை தொடர்பில் பொதுவான கொள்கை இருந்தால் அதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.
துப்பாக்கிகள் முறைகேடாக பயன்படுத்திய விதம்
ஆனால் துப்பாக்கிகள் பாவனையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதென்றால் அது பொதுவானதாக இருக்க வேண்டும்.டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் , ஜே.வி.பி உறுப்பினர்களை கொலை செய்ய வழங்கப்பட்ட துப்பாக்கிகள் நிறைய இருக்கின்றன. இவை தொடர்பிலும் விசாரணை நடத்துவதென்றால் டக்ளஸ் தேவானந்தாவை சிறையில் வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.
இந்நாட்டில் பல ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் முறைகேடாக பயன்படுத்திய நிலையில் இவ்வாறான கைதுகள் அரசியல் சார்பானதாகும். டக்ளஸுக்கு இருந்த பிரச்சினை எல்லோருக்கும் தெரியும்.

சிறைச்சாலையில் எத்தனையோ முறை கொல்ல முயற்சி செய்தனர்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதால் ஒன்றல்ல பல துப்பாக்கிகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.
அவை முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.குமரன் பத்மநாதனிடம் இருந்த துப்பாக்கிகள் எங்கே? ஏன் அவரை புலனாய்வு பிரிவினர் கைது செய்யவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மட்டும் 15000 துப்பாக்கிகளை அரசாங்கம் கைப்பற்றியது.மேலும் பல துப்பாக்கிகள் மறைக்கப்பட்டுள்ளன.

மேலும் 88-89 கிளர்ச்சியில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.அதனால் டக்ளஸ் தேவானந்தாவின் கைதில் சந்தோசப்படப்போவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்பானவர்கள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.