பொது வேட்பாளர் முயற்சி தமிழினத்துக்கு ஆபத்தே! டக்ளஸ் எச்சரிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியானது, பயனற்றது மாத்திரமல்ல அது தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (15.06.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றன.
தீராப் பிரச்சினைகள்
ஆனால், என்னைப் பொறுத்த வரையில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கின்றேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்குப் பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும்.
உண்மையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
இவர்கள் எல்லோரையும் உருளைக்கிழங்கைப் போல் மூடையில் ஒன்றாகக் கட்டி வைத்திருந்தாலும் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லாத சூழலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர்.
தேர்தல் காலம்
இவ்வாறான நிலைமையில் இவர்களுக்குள் ஐக்கியம், ஒற்றுமை எங்கே இருக்கின்றது? பல வருடங்களாக இப்படி கட்டி வைத்து என்ன கிடைத்தது? அழிவைக் கட்டுப்படுத்த முடிந்ததா? அல்லது முன்னேற்றம் ஏதும் வந்ததா? ஒன்றும் இல்லாத நிலையில் இப்போது தேர்தல் வருகின்றபடியால் மீண்டும் அதைப் பற்றிப் பேசுகின்றனர்.
எம்மைப் பொறுத்தவரையில் இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதைக் கூறினோமே அதனையே இப்போதும் கூறுகின்றோம்.
ஆக சொல்வதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும்தான் நான். எனவே, எங்களை நம்பி மக்கள் எம்மோடு பயணிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களைப் பெற்றுக்கொடுக்க முடியும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |