தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன்: அமைச்சர் டக்ளஸ் சூளுரை
தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
மன்னார் (Mannar) மாவட்டத்திற்கு இன்றையதினம் (20.04.2024) விஜயம் செய்த அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநலப் பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ தோல்வி காணவோ கூடாது.
சொல்லொணா இன்னல்கள்
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தப்படும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்திலும் எமது மக்கள் இனி ஒருதடவை தோல்வியுற இடமளிக்கக் கூடாது.
தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் போட்டியிடும் ஒரு தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் ஆதரவு வழங்கி அதனூடாக பேரம் பேசும் சக்தியாக நாம் உருவாக வேண்டும் என்ற நிலையில் இருந்து முன்னெடுத்த பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியையே கண்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் சொல்லொணா இன்னல்களையும் எதிர்கொண்டுவிட்டனர்.
சாதுரிதமான வழிமுறைகள்
ஆனால் எமது நடவடிக்கைகள், தமிழ் மக்கள் தோல்வி காணக்கூடாது என்ற நிலையிலிருந்தே முன்னெடுக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது, அதற்கான கள நிலைமைகளை உருவாக்க சாதுரிதமான வழிமுறைகளும் எம்மிடம் உள்ளது.
அதனை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |