வவுனியாவை உலுக்கிய இரட்டை கொலை சம்பவம்! பிரதான சந்தேகநபரை அச்சுறுத்திய நபர்
வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேகநபர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து குடும்பஸ்தர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோணிக்கல் பகுதியில் கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.
தொடர்ந்து, இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆறு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் (08.01.2024) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேக நபர்கள் மன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், பிறிதொரு வழக்குக்காக மன்றுக்கு வந்திருந்த எரியுண்ட வீட்டு உரிமையாளர், பிரதான சந்தேக நபரை அச்சுறுத்தியதாக, நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட எரியுண்ட வீட்டு உரிமையாளரை
நீதிமன்ற சிறைக் கூண்டில் தடுத்து வைப்பதுடன்,
சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்யுமாறும் வவுனியா பொலிஸாருக்கு மன்று
உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
நீதிமன்றம் சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டதுடன், எரியுண்ட வீட்டு
உரிமையாளரை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட மன்று, எரியுண்ட வீட்டு உரிமையாளரை எச்சரித்து விடுவித்ததுடன், இது தொடர்பில் விரிவான விசாரணை செய்யுமாறும், குற்றம் ஏதாவது நிகழ்ந்திருப்பின் மன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், எரியுண்ட வீட்டு உரிமையாளரிடம், பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |