30 ஏக்கர் காணியை நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம்: திருகோணமலையில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
30 ஏக்கர் காணியை நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம் என திருகோணமலை வில்கம் விகாரை மக்கள் வீதியை மறித்து 5ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை - வில்கம் விகாரை வனப்பகுதியிலுள்ள காணிப்பகுதியினை ஆக்கிரமிப்பு செய்தமைக்கு எதிராக அப்பகுதியிலுள்ள மக்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டு 5ஆவது நாளாகவும் தொடரும் நிலையில் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தாத நிலையில் மக்கள் நேற்று(04) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு ஆவணை செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அவ்வீதியூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
வில்கம் விகாரை வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு 30 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி கையகப்படுத்தப்படுவதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பாக அரச மட்டங்களுக்கு அறிவித்திருந்தபோதிலும் இதுவரை அதற்கான பதில் கிடைக்காததால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல வருட காலங்களாக அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு இதுவரை காணித் துண்டுகள் அரசினால் வழங்கப்படாத நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற செல்வந்தர்களுக்கு வனப்பகுதியிலுள்ள காணிகள் என்பன தாரைவாக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தம்மால் பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


