டொனால்ட் ட்ரம்பின் புதிய உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிறுவர்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் இந்த மாதம் புதிய நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
ஒட்டிசம் குறைபாட்டிற்கு தடுப்பூசிகளே சாத்தியமான காரணி என்ற தமது எண்ணத்திற்கு நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ட்ரம்பின் அதிருப்தியே இந்த உத்தரவுக்கு பிரதான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த ஒரு உத்தரவு மட்டும் அமெரிக்காவின் தடுப்பூசிக் கொள்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும், சுகாதாரச் செயலாளர் ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் 'அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்குவோம்' (MAHA) அரசியல் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தாது என்றும் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான சிறுவர்களை ஆய்வு செய்து, தடுப்பூசிகளுக்கும் ஒட்டிசத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிரூபித்துள்ளனர்.
புதிய உத்தரவு
இருப்பினும், கென்னடியும் அவரது ஆதரவாளர்களும் தடுப்பூசிகளின் ஆபத்துகள் மற்றும் ஒட்டிசம் உடனான தொடர்புகள் குறித்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு, மத்திய அரசின் சிறுவர்களுக்கான தடுப்பூசி அட்டவணையில் உள்ள 17 தடுப்பூசிகளை 11 ஆகக் குறைக்கிறது.

மேலும், தட்டம்மை, அம்மைக்கட்டு மற்றும் ருபெல்லா (MMR) ஆகிய மூன்றிற்குமான ஒரே தடுப்பூசியைப் பிரித்து மூன்று தனித்தனி ஊசிகளாக வழங்குமாறும் உத்தரவிடுகிறது.
அத்துடன், பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களுக்கான மாநில அளவிலான கட்டாயத் தடுப்பூசி விதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதித் திணைக்களத்திற்கு ட்ரம்ப் பணித்துள்ளார்.
மருத்துவ அமைப்புகள் பலவும் ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பெற்றோரிடையே பெரும் குழப்பத்தையும் தடுப்பூசி தயக்கத்தையும் அதிகரித்து, தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய நோய்களால் சிறுவர்கள் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளன.

நீண்டகாலமாக தடுப்பூசி எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவித்து வரும் கென்னடி, ஒட்டிசம் குறைபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிவதாக உறுதியளித்திருந்தார். இதற்காக அவர் அளித்த கெடு காலங்கள் முடிவடைந்த நிலையிலும் புதிய முடிவுகள் எதுவும் வெளியாகாததால், ஓவல் அலுவலக சந்திப்புகளிலும் தொலைபேசி அழைப்புகளிலும் ட்ரம்ப் கென்னடிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
அமெரிக்க சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வுகள் நிறைவடைய பல மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த மெதுவான போக்கு ட்ரம்பின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.