அமெரிக்க தேர்தலில் சீனாவின் அத்துமீறல்.. ட்ரம்ப் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சீனா தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து ஆற்றிய உரையில் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு முறையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பலவீனங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோ பைடனுக்குச் சாதகமாகத் தேர்தலை மாற்ற சீனா முயன்றதற்கான உளவுத்துறை கோப்புகளைத் தான் பகிரங்கப்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார்.
மறுக்கும் சீனா..
ஆனால், சீனாவின் வெளியுறவு அமைச்சு இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை என்றும், ஆதாரமற்றவை என்றும் கூறி கடுமையாக மறுத்துள்ளது.

சீனா சுமார் 220 மில்லியன் அமெரிக்க வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடியுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
18 மாநிலங்களில் உள்ள வாக்காளர் தரவுகள் சீனாவால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளிநாட்டு எதிரிகளால் ஊடுருவப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்தார்.
அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ட்ரம்ப் வேண்டுமென்றே தேர்தல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் சந்தேகத்தை விதைப்பதாக ஜனநாயகக் கட்சியினர் சாடியுள்ளனர்.
வாக்காளர்கள் தங்களின் தலைவர்களைத் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதைத் ட்ரம்ப் தடுக்க முயல்வதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.