அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள டொனால்ட் டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் இடம்பெற்ற நிலையில்,ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்ததுடன், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தோல்வியடைந்திருந்தார்.
தேர்தலில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததுடன், அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்த டிரம்பின் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டிருந்ததுடன், இதில் பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
வன்முறைக்கு டிரம்ப்பின் பேச்சுக்களே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக நீக்குவதாக விளக்கமளித்திருந்தது.
மேலும் மற்ற சமூக வலை தளங்களும் தடை விதித்திருந்த நிலையில்,கடந்த ஜூலை மாதம் டுவிட்டர், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையிலேயே, தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டிரம்ப் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அரசியலை ஆக்கிரமிக்கும் வகையிலும், முன் எப்போதும் இல்லாத வகையிலும் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கின்றது. தலிபான்கள் கூட சுதந்திரமாக டுவிட்டரில் பதிவிடுவதற்கு டுவிட்டர் நிர்வாகம் அனுமதிக்கின்றது. ஆனால் நான் அதிபராக இருந்த போது எனது டுவிட்டுகள் போலி தகவல்களை கொண்டவை என்று தொடர்ந்து முத்திரை குத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.