நெருக்கடிகளுக்கு தீர்வை வழங்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்-தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
பொருளாதார நெருக்கடி உட்பட நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு சரியான தீர்வு யோசனைகளை முன்வைக்க முடியாது போன எவருக்கும் மக்கள் வாக்களிக்கக்கூடாது என சிங்கள தேசியவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதால் அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.
பொறுப்பை நிறைவேற்ற தவறிவர்களுக்கு எதிர்ப்பை காட்ட வேண்டும்
இதனால், தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதற்கான எதிர்ப்பை காட்டும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார கூறியுள்ளார்.
மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை கோரவில்லை.எனினும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
பல்வறு வழிமுறைகளை பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகிறது.தேசிய சக்திகள் இதனை அனுமதிக்காது.
நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் தேர்தலை கோருகின்றன.அரசாங்கத்திடம் நெருக்கடிகளை தீர்க்க வழிமுறை ரீதியான திட்டங்கள் இல்லை என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூட பேசுவதில்லை.
எவ்வாறாயினும் பொருளாதார நெருக்கடியால் பெரிதும் கஷ்டங்களை அனுபவித்து வரும் மக்கள் அந்த நெருக்கடிக்கான தீர்வையே எதிர்பார்க்கின்றனர் என்பதை அரசாங்கம் மறக்கக்கூடாது.
நெருக்கடிகளுக்கு குறுகிய தீர்வை தேடுவது காலத்தை வீணடிக்கும் அநியாயம் எனவும் வசந்த பண்டார கூறியுள்ளார்.