இலங்கையில் டொலரின் பெறுமதிக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் சம்பளம்
டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு ஏற்பவும் உள்நாட்டு வாழ்க்கை செலவினைப் பொருத்துமே சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும். விரைவில் மலையக மக்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம் என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன.
பொதுவாக இரண்டு வருடங்களில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகி உள்ளது. இதற்காக நாம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளோம்.
தற்போது பெருந்தோட்டக் கம்பனிகள் அவர்களின் முன்மொழிவுகளை வழங்கியுள்ளன. பெருந்தோட்டத் தொழில் என்பது அந்நியச் செலாவணியுடன் தொடர்புபட்டது.
எனவே டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு ஏற்பவும் உள்நாட்டு வாழ்க்கை செலவினைப் பொருத்துமே சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும். விரைவில் மலையக மக்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.
எமது நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது இருக்கும் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. அவர் அதனை செய்தும் காட்டியுள்ளார்.
எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை. உணவு இல்லை. மருந்துகள் இல்லை என அன்று இருந்த அதே அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியாது என அனைவரும் கைவிரித்தபோது, அதே அரசாங்கத்தை எடுத்து அதனைத் தற்போதைய ஜனாதிபதி செய்து காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாது.
தற்போதுள்ள வரி விதிப்புகள் அனைத்தும் ஜனாதிபதி விரும்பி ஏற்படுத்தியவை அல்ல. மாறாக சர்வதேச நாணய நிதியம் எமது நாடு பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்காக இட்ட நிபந்தனைகளாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |