எச்சரித்தது போலவே வீழ்ச்சியை நோக்கி நகரும் இலங்கை ரூபாவின் பெறுமதி! மீண்டும் அதிர்ச்சியளிக்கும் பொருளாதார சரிவு நிலை
இலங்கையில், தொடர்ந்தும் உயர்ந்து வந்த ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த எச்சரிக்கைகளுக்கு ஏற்றாற் போல் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிகம் செயற்றிறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா காணப்படுகின்றது எனவும், எனினும் அது வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் ப்ளூம்பேர்க் இணையத்தளமும், கடந்த காலங்களில் உயர்வடைந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதி வெகு விரைவில் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றது என பொருளாதார நிபுணர்களும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வந்திருந்தனர்.
அதேபோல, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக ரூபாவின் பெறுமதி மிக வேகமான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மிக வேகமாக உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த இரண்டு - மூன்று மாதங்களாக தொடர் சரிவையும் தளம்பல் நிலையையும் சந்தித்து வந்தது.
அந்த காலப்பகுதியில், இலங்கை ரூபாவின் பெறுமதியில் கடந்த இரு மாதங்களாக தொடர் உயர்வு பதிவாகி வந்ததுடன் ஒரு சில சமயங்களில் தளம்பல் நிலை ஏற்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
டொலருக்கு நிகராக மாத்திரம் இன்றி பிரித்தானிய பவுண்ட், யூரோ, கனேடிய டொலர் என பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவி்ன் பெறுமதி பாரிய சரிவை சந்தித்து வருகின்றது.
அமெரிக்க டொலர்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் பெறுமதியானது கடந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த 12.06.2023 ஆம் திகதியன்று அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி, 290.06 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 303.73 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(15.06.2023) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி, 311.60 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் டொலரின் விற்பனை பெறுமதியானது, 25.19 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 21.54 ரூபாவால் அதிகரித்துள்ளது.
கனேடிய டொலர்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கனேடிய டொலரின் பெறுமதியும் கடந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த 12.06.2023 ஆம் திகதியன்று கனேடிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 215.86 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 228.49 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(15.06.2023) கனேடிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 231.73 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 247.95 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் கனேடிய டொலரின் விற்பனை பெறுமதியானது, 19.5 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 15.87 ரூபாவால் அதிகரித்துள்ளது.
யூரோ
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோ பெறுமதியானது கடந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த 12.06.2023 ஆம் திகதியன்று யூரோவின் கொள்வனவு பெறுமதி, 310.61 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.37 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(15.06.2023) யூரோவின் கொள்வனவு பெறுமதி, 335.94 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 356.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் யூரோவின் விற்பனை பெறுமதியானது, 29.55 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 25.33 ரூபாவால் அதிகரித்துள்ளது.
பவுண்ட்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, பிரித்தானிய பவுண்டின் பெறுமதியானது கடந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த 12.06.2023 ஆம் திகதியன்று பிரித்தானிய பவுண்டின் கொள்வனவு பெறுமதி, 364.13 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 382.61 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(15.06.2023) பிரித்தானிய பவுண்டின் கொள்வனவு பெறுமதி, 392.72 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 417.00 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் பிரித்தானிய பவுண்டின் விற்பனை பெறுமதியானது, 34.39 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 28.59 ரூபாவால் அதிகரித்துள்ளது.
ஒரு வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
கிட்டத்தட்ட கடந்த வருடம், பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டொலரின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்திருந்தது, 371 ரூபாவாக அதன் விற்பனை பெறுமதியும், கொள்வனவு பெறுமதி 370 ரூபாவையும் அண்மித்திருந்தது. இந்தநிலை, இவ்வருடம் பெப்ரவரி மாதம் வரையில் நீடித்திருந்தது.
இந்த மாற்றமானது, இலங்கையில் பல்வேறு துறைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டுவரத் தொடங்கியது. குறிப்பாக பொதுச் சேவை கட்டணங்கள் குறைப்பு, எரிவாயு, எரிபொருள் விலை குறைப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு போன்ற பொதுமக்களுக்கு சாதகமான மாற்றங்களை சிறிதளவில் ஏற்படுத்தியிருந்தது.
எனினும், கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி இனி வரும் நாட்களில் எவ்வாறான தாக்கம் செலுத்தும் என்ற அச்சம் பொதுமக்களிடத்தில் காணப்படுகின்றது.
எனினும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பாக கவலையடைய தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், தேவை மற்றும் விநியோகத்தை பொறுத்தே மாற்று விகிதம் தீர்மானிக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். இறக்குமதிக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளதன் காரணமாக ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளதாகவும், இனி வரும் நாட்களில் இறக்குமதி குறைந்து டொலருக்கான தேவையும் குறைவடையும் போது ரூபாவின் பெறுமதி வலவடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேசமயம், நாணய மாற்று விகிதங்கள் சாதகமான நிலையில் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், டொலரின் பெறுமதி ஏற்ற, இறக்கம் என்று செல்லும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரமும் தளம்பல் நிலையை அடைந்து வருகின்றது.
குறிப்பாக, இறக்குமதி குறித்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தல் மற்றும் கடன் செலுத்துகை என்பன ஆரம்பிக்கப்பட்டதும் ரூபாவின் பெறுமதி சரிந்து நெருக்கடி நிலை மீண்டும் ஆரம்பிக்கும். மீளவும் கடன் பெற வேண்டிய நிலை தோற்றம் பெறலாம் என்பதுடன், நாட்டின் பொருளாதாரமும் ஸ்திரமற்ற நிலையிலேயே தொடரும். உள்ளூர் உற்பத்தி, வாழ்வாதாரம் என அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை காணப்படுகின்றது.
ஆக மொத்தத்தில் ரூபாவின் பெறுமதி மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றது என்பது பொருளதார நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேசத்தின் கணிப்பாக உள்ளது. அவ்வாறு ஏற்படும் சமயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
அதேசமயம், நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவு பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நாட்டின் பொருளாதாரம் 11.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது பொருளாதார வளர்ச்சி மறை 11.5 வீதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You My Like this Video