டொலரின் பெறுமதி 400 ரூபாய்! ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு
ஆரம்பத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது, இலங்கை ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி 400 ரூபாவாக உயரும் என்று தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், தற்போது ரூபாவின் மதிப்பு ஒரு டொலருக்கு 300 ரூபாவாக வலுவடைந்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரூபாவின் பெறுமதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எனவே, நிலைபேறான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கி பொருளாதாரத்தை வழிநடத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அடித்தளமிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் நாங்கள் எதிர்கொண்ட சவால்களில் ஒன்று, இந்த மகத்தான வெற்றியைத் தடுக்க முயன்றவர்களால் எமது பொருளாதாரக் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரான கட்டுக்கதைகளையும் தீய பிரசாரங்களை எதிர் கொண்டமையாகும்.
இலங்கை ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி 400 ரூபாயாக உயரும், எரிபொருள் வரிசைகளின் சகாப்தம் மீண்டும் ஏற்படும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களும் வெளிநாடுகளும் புதிய அரசாங்கத்தைத் தனிமைப்படுத்துவர், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழப்பார்கள், தனியார் சொத்துக்கள் முழுமையாக தேசியமயமாக்கப்படும் போன்ற தவறான கருத்துக்கள் காணப்பட்டன.
அற்ப அரசியல் நோக்கங்களுக்காக இயக்கப்படுகின்ற கட்சிகளால் உருவாக்கப்பட்ட எமது அரசாங்கத்திற்கெதிரான பிம்பம் மேலதிக தடைகளை ஏற்படுத்தியது. எமக்கெதிராக இதுபோன்ற எதிர் பிரசாரங்கள் இருந்தபோதிலும், புதிய சூழ்நிலையினை வெற்றிகரமாக வழிநடத்தவும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் வெளிநாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேணவும், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும் எம்மால் முடியுமாக இருந்தது.
அந்நிய செலாவணி இருப்பு
அதன்படி, விலை மற்றும் நிதித் துறை படிப்படியாக ஸ்திரமடைந்ததுடன், ஒரு வருட அளவீட்டின்படியான திறைசேரி உண்டியல் வீதம் 8.8% ஆகக் குறைவடைந்து, பணவீக்கம் 2025 ஜனவரியில் 4.0% எதிர்மறையாகக் காணப்பட்டது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் குறிப்பிடத்தக்க அளவிலான கடன் மீள்கொடுப்பனவுக்குப் பின்னர் அந்நிய செலாவணி இருப்பானது 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
இதற்குமேலதிகமாக, நாணய மதிப்பு தேய்மானம் குறித்த விடயங்கள் இருந்தபோதிலும், இலங்கை ரூபாவின் மதிப்பு ஒரு டொலருக்கு ஏறக்குறைய 300 ரூபாக வலுவடைந்துள்ளதுடன் 2025 இல் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 நடுப்பகுதியில் இருந்து இலங்கை நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் பொருளாதார சீர்திருத்தங்களைச் செயற்படுத்தியது. சில சந்தர்ப்பங்களில் இந்த தீர்வு நடவடிக்கைகள் மக்கள் மீதான அழுத்தங்களை அதிகரித்தன.
குறிப்பாக செலவு-பிரதிபலிப்பு எரிசக்தி விலை நிர்ணயம், வரி அதிகரிப்பு மற்றும் வட்டி விகித உயர்வு போன்ற நடவடிக்கைகளாகும்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் சர்வதேச நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் பங்கை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், எமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார இறையாண்மையின் வடிவத்தில் பொருளாதாரத்தின் முழு கட்டுப்பாட்டையும் அடைய வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
