வடக்கிற்கு தேவையா ஹிந்தி
கடந்த அண்மை நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஹிந்தி மொழி கற்பது பற்றிய வாதங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக இன்னொரு தரப்பினரும் என சமூக வலைதளங்கள் களைகட்டிக்கொண்டிருக்கின்றன.
இப்படியொரு வேலைத்திட்டத்தை வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் மேற்கொண்டால் அது எப்படியான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கும்?, அது வெற்றியளிக்குமா? தோல்வியளிக்குமா? என்கிற மதிப்பீடுகளுக்குப் பதில் தரும் வகையில் இந்த வாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
யாழ்.இந்து ஏன் தெரிவுசெய்யப்பட்டது
வடக்கில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது யாழ். இந்துக்கல்லூரிதான். புலமைத்துவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கருத்துருவாக்க ரீதியிலும் ஈழத் தமிழ் சமூகத்தினுள் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கினை இந்தக் கல்லூரி கொண்டிருக்கிறது.
இதன் விளைவாகவே தமிழர் விடுதலையை முன்னிறுத்திய எத்தகைய போராட்டமாயினும் சரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அடுத்த நிலையில் யாழ். இந்துக் கல்லூரி திகழ்ந்திருக்கின்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியகர்த்தாக்கள் பலரும் கற்ற பாடசாலை இது. எனவேதான் இங்கு நடக்கும் மாற்றங்களானவை தமிழ் சமூகத்தினுள் மிக விரைவாக வேர்விடும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. அதற்கு அடுத்த காரணம் அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் ஓர்மம்.
“இந்து அன்னை” என்றே மாணவர்கள் தம் பாடசாலையை அழைக்கின்றனர். அன்னை எனும்போதே பாடசாலையை தாய்க்கு ஒப்பானவளாக உளத்தில் பதியவைத்துக்கொள்கின்றனர். எனவே ஒரு தாய் தன் பிள்ளைகளுக்குத் தீங்கிழைக்கவோ, பிழையாக வழிநடத்தவோமாட்டாள் என்கிற நம்பிக்கை மாணவர்களின் நெஞ்சுரமாக இருக்கிறது.
எவ்விடத்திலும் தன் அன்னையை விட்டுக்கொடுக்கவோ, பழிச்சொல் சுமத்தப்படவோ இந்துவின் மைந்தர்கள் யாரும் விரும்புவதில்லை. அந்த மகுடச்சொற்களின் பின்னால் இருக்கும் உளவியல் சரத்தினைத் தெளிவாகப் புரிந்துகொண்டே, தமிழ் இனத்திற்கு எவ்விதத்திலும் உதவாத ஹிந்தி மொழி கற்பித்தல் அறிமுகமானது, அங்கே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டளவிலும், உலகளவிலும் முக்கிய ஆளுமைகளாக- புலமைவாதிகளாக செயற்படும் இந்துவின் மாணவர்கள் யாருக்கும், ஹிந்தியும், அது அடுத்ததாகக் கொண்டுவரும் இந்துத்துவா அரசியலும் தெரியாமலில்லை. ஹிந்தி மொழி ஆக்கிரமிப்பின் பல்வேறு வடிவங்களையும் அண்டைத் தேசமான தமிழகம் எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறது.
ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்தும்போயிருக்கின்றனர். இப்போதும் கூட ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராகத் தமிழகம் எவ்வாறெல்லாம் போராடுகிறது என்பதை சமூகவலைதளங்கள் ஊடாக அறிந்துகொண்டுதான் இத்தலைமுறையினர் இருக்கின்றனர்.
இந்துத்துவா கட்டியெழுப்பும் ஏனைய மதத்தினர் மீதான காழ்ப்புணர்வு அரசியல் எவ்வகையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை இந்திய வடமாநிலங்களின் நடக்கும் வன்முறைகள் தகுந்த ஆதாரங்களாக இருக்கின்றன. ஹிந்தி, இந்து, இந்துத்துவா என்கிற ரீதியில் வளரும் இந்த ஆபத்தை யாரும் புரியாமல் இல்லை. ஆயினும் யாழ்ப்பாணத்திற்கு ஹிந்தி அறிமுகமாவதை ஆதரிக்கின்றனர் என்றால், தன் இந்து அன்னை மீது வரலாற்றில் ஏற்படப்போகும் பழிச்சொல்லிலிருந்து காப்பாற்றும் நோக்கமே தவிர வேறொன்றுமிருக்கப்போவதில்லை.
வெளிக்கிளம்பும் இந்துத்துவா
ஏற்கனவே வடக்கு, கிழக்கு மாகணங்களில் இந்துத்துவா கோசங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படத்தொடங்கிவிட்டன. மன்னாரில் திருக்கேதீஸ்வர சூழலில் ஏற்பட்டுவரும் சைவ - கிறிஸ்தவ முரணை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு இங்கு பெரியளவில் மத வன்முறைகள் நடப்பதாகப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
இரு சமயப்பிரிவினரும் ஓரிடத்தில் அமர்ந்துபேசினாலே தீர்ந்துபோகக்கூடிய இப்பிரச்சினையை இரு தரப்பிலும் நுழைந்திருக்கும் மத அடிப்படைவாத தரப்பினர் மதவாத வன்முறைநோக்கி இழுத்துச்செல்கின்றனர்.
இந்தத் தரப்பினர் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பௌத்தமயமாக்கல் குறித்து வாயே திறக்கமாட்டார்கள். பௌத்தமும், இந்துவும் இந்நாட்டின் பூர்வ மதங்கள் எனக்கூறி கடந்து போய்விடுவர்.
இந்திய மாநிலமாக மாறும் வடக்கு
வடக்கு, கிழக்கில் இருப்பது உள்ளக இன முரண்பாடு, இரண்டு சமூகங்களுக்கிடையிலான முரண்பாடு என்ற ரீதியில்தான் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தை ஐ.நா தொடக்கம் அமெரிக்கா கையாளுகின்றன. அதற்கு வலுச்சேர்ப்பதற்கு இவ்வாறான மத - சமூக முரண்பாடுகள் அவசியமானவை.
அதேபோல வடக்கு, கிழக்கு பகுதிகளை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் இந்தியாவிற்குத் தொடர்ந்தும் இங்கு நிலைகொள்ள ஏதாவதொரு பிரச்சினை தேவை.
விடுதலைப் புலிகள் களத்தில் இருக்கும்வரை அது சாத்தியப்படவே இல்லை. புலிகளின் மௌனிப்பிற்குப் பின் திறந்தவீடாகிவிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் இன்னொரு மாநிலமாக மாறிக்கொண்டிக்கிறது.
இந்த வேலைத்திட்டத்தைக் தொடர்ந்தும் வெற்றிகரமாகக் கொண்டுநடத்த, இந்தியா மீது வெறித்தனமான பாசம் கொண்ட தரப்பினர் தேவை.
இந்தியாவை தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை
கடந்த 13 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் தன்னை நிலைநிறுத்த பல்வேறு வேலைத்திட்டங்களையும் இந்தியா மேற்கொண்டது. தன் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வீடற்று தெருவில் தங்கிக்கொண்டிருக்கையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீட்டுத்திட்டங்களை மேற்கொள்ள பல்லாயிரம் கோடி பணத்தை செலவிட்டது.
தன் நாட்டு மக்கள் நடப்பதற்கோ, பயணிப்பதற்கோ உரிய போக்குவரத்து வழிகள் இன்றி வழிநடுவே இறந்துகொண்டிருக்கையில், வடக்கு, கிழக்கை கொழும்புடன் இணைக்க புகையிரத பாதை புனரமைப்பை செய்தது இந்தியா.
தன் நாட்டு மக்களைவிட இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் நலனில் அதிக அக்கறை காட்டியது இந்தியா. ஆனால் இந்தியாவின் உதவிகள், நன்கொடைகளுக்குப் பின்னால் இருக்கின்ற சூட்சுமத்தை கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் தெளிவாகக் கற்றுக்கொண்ட தமிழ் மக்கள் இதற்கெல்லாம் மசிந்துபோகவில்லை. இந்திய உதவிகளைக் கண்டுகொள்ளவுமில்லை.
“நீ செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்கிறாய்” என்றளவிற்குள் கடந்துபோய்விட்டனர்.
தேவை அகமாற்றங்கள்
எனவேதான் வடக்கு, கிழக்கில் இந்திய விசுவாசமிக்க தரப்பொன்றை உருவாக்கும் வேலைகள் நடக்கின்றன. மத, சாதிய மனோபாவங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளாத ஈழத் தமிழ் சமூகப் பிறழ்வாளர்களில் ஒரு தொகுதியினர் இதற்காக செயற்படவும் தொடங்கிவிட்டனர்.
தனிநபர்களாக, குழுக்களாக, அமைப்புக்களாக அந்த அணியினர் செயற்பட்டுவருகின்றனர். அந்த அணியின் பலத்தை அதிகரிக்கக்கூடிய நுண்மாற்றங்கள் அவசியப்படுகின்றன.
இதுவரை காந்தி சிலை வைப்பது, விநாயக் (பிள்ளையாரல்ல) சிலை வைப்பது, அனுமான் சிலை வைப்பது. ஐயப்பன் ஆலயங்களை உருவாக்குவது, எவ்வித மகிமையுமின்றி கண்டகண்ட இடங்களிலெல்லாம் திடீர் சிவன்களை வைப்பது, இதனால் ஏற்படும் சமய சண்டைகளை, சாதிய – மதவாத முரணாக மாற்றிப் பரப்புரை செய்வது போன்ற பௌதீக மாற்றங்கள் இந்த அணியினர் செய்துவந்தனர். ஆனால் அது நிலைத்திருப்பது கேள்விக்குறியாகிறது.
நாளைக்கே ஓர் இடர்வரின் இந்தப் புற மாற்றங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். எனவேதான் அகமாற்றங்களை நோக்கிய வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதில் ஒன்றுதான் ஹிந்தி அறிமுகம். அறிவை விருத்திசெய்யும் நோக்குடன் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளல் தவறில்லையே, ஹிந்தியைத் திணிப்பதுதான் தவறு, விரும்பிக்கற்பது தவறி்ல்லையே, அது அவரவர் உரிமைசார்ந்த விடயம் என்கிற வகையில் பொதுப்புத்திக்கு வலியேற்படாதவாறு விச ஊசி ஏற்றப்பட்டிருக்கிறது.
இந்த மொழியைக் கற்பதனால் என்ன பயன்? என்கிற கேள்விக்கு உரிய பதில் வழங்கப்படாமலேயே அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது. பல்கிப்பெருகிவரும் தொழில்நுட்பத்துறைகள் பல்வேறு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிவிட்டுள்ளன.
ஆங்கிலம், மாண்டரீன், கொரியன், அரபு ஆகிய மொழிகளுக்குள் சுருண்டுவிட்ட, இந்தத் தொழில் சந்தையில் ஒருவர் இடம்பிடிக்க அந்த மொழிகளையே மாணவர்கள் கற்கவேண்டும்.
மாறாக “தேவபாசை” என்கிற அளவில் வதந்தி பரப்பப்படும் ஒரு மொழியைக் கற்ற என்ன பயன். எதிர்காலம் என்பது தேவனோடு பேசுவதல்ல. தொழில்நுட்பத்தோடு வாழ்வது. எண்ணிம சூழலோடு பொருந்திப்போவது. ஏற்கனவே இலங்கையில் பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் தம் வாழ்க்கைக்கு உதவாத பல பாடங்களைக் கற்கின்றனர் என்ற விமர்சனம் உண்டு.
இந்நிலையில் தொழில் வாய்ப்பைத் தராத, அறிவியலைப் பெருக்காத, பகுத்தறிவை ஏற்படுத்தாத ஒரு மொழியை நம் பிள்ளைகள் ஏன் கற்கவேண்டும்? ஆசிய வல்லரசு கனவில் இந்தியா ஒரு “டம்மி பீஸ்”. பௌதீக ரீதியில் சீனா இந்தியாவை சுற்றிவளைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், 2500 வருடங்களாக இந்தியாவுக்குக் கீழே, அமைவிடம் பெற்றிருக்கும் இலங்கை என்கிற குட்டித்தீவையே அந்த வல்லரசினால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
அதன் அனைத்து ராஜதந்திரங்களையும் அடித்துத் துவைத்துக் காயப்போட்டுவிட்டு இலங்கை வளர்ந்திருக்கிறது. தேவை வரும்போது சேர்த்துக்கொள்ளவும், தேவை முடிந்ததும் கழற்றிவீசுவதுமான இராஜதந்திரப் பொறியை இலங்கை இந்தியாவை நோக்கி நிரந்தரமாகவே வைத்திருக்கிறது.
இலங்கையினிடத்தில் ஏற்படும் தோல்விகளைச் சமாளித்து, தனக்கான தனி ராச்சியத்தை வடக்கு, கிழக்கில் உருவாக்கும் வேலைத்திட்டத்திற்குப் பணிசெய்ய அடிமைகளை உருவாக்கப்போகிறோமா? உண்மையில் இது ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புட்ட விடயம்.
தூதரகங்கள், தூதரகங்களின் நிதியளிப்பில் இயங்கும் நபர்கள், நிறுவனங்கள், அவை மேற்கொள்ளும் செயற்றிட்டங்கள் குறித்தெல்லாம் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தரப்பினர்தான் கவனிக்கவேண்டும்.
ஒரு நாட்டின் இறையாண்மையில், அந்தத் தேசத்துக்குரித்தான மக்களின் வாழ்வொழுங்கில் வெளிச்சக்திகள் மேற்கொள்ளும் அக – புற மாற்றங்கள் குறித்தெல்லாம் ஆய்வுகள் அவசியம். கண்காணிப்பு அவசியம்.
ஆனால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பென்பது, ஆட்சியாளர்களைப் பாதுகாப்பது, அவர்தம் ஊழல்களை மறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது, தமிழ், முஸ்லிம் மக்களைக் கண்காணிப்பது என்றளவில் சுருங்கிக் கிடக்கிறது. எனவே இலங்கை வாழ் சமூகங்கள்தான் தன்னைச் சுற்றி நடக்கும் நன்மை தீமைகள் குறித்து அக்கறைகொள்ளல் வேண்டும்.