முத்துராஜாவின் தந்தங்களை வெட்டிக்குறைப்பதற்கு திட்டமிடும் மருத்துவர்கள்
இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு பின்னர், திருப்பியழைக்கப்பட்ட 29 வயதுடைய பிளே சாக் சுரின் (முத்துராஜா) என்ற யானையின் தந்தங்களை வெட்டிக்குறைப்பதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தாய்லாந்து-லாம்பாங் நகரில் உள்ள, யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர்.
யானையின் நீண்ட மற்றும் கனமான தந்தங்கள் அதன் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக மலைகளில் செல்லும்போது அல்லது தடைகளைத் தவிர்க்கும்போது, அதன் தந்தங்கள் தரையில் இழுக்கப்படுவதைத் தடுக்கவும், தமது தலையை உயர்த்தவும், இந்த நடவடிக்கை அவசியமாவதாக தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பரிசாக கிடைத்த யானை
முன்னதாக, குறித்த யானையின் முன் இடது காலில் ஏற்பட்ட காயம், அதன் இயக்கத்தை கடினமாக்கியது, எனினும் தொடர்ந்து உடல் சிகிச்சை மூலம் முன்னேற்றம் அடைந்து வருவதாக தாய்லாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முத்துராஜா என்று பொதுவாக அழைக்கப்பட்ட பிளே சாக் சுரின், ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக மத அணிவகுப்புகளில் பங்கேற்று, புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவதால் காயங்களுக்கு உள்ளானது.
2001இல் தாய்லாந்து இலங்கைக்கு பரிசாக வழங்கிய பல யானைகளில் ஒன்றான அது, பின்னர் திருப்பியழைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |