அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு...
இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு திருப்பத்தை ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தங்களின் விருப்பத்தை தேர்தல் முடிவுகளாக்கியுள்ளனர்.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலின் போது அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான போட்டியில் அநுர குமார வெற்றி பெற்றார்.
ஆனாலும் முதலில் 50 சதவீத வாக்குகளை எவரும் பெற்றிராத நிலையில் இரண்டாவது தேர்வு முறையாக விருப்பு வாக்கு எண்ணும் நடைமுறை தெர்தல் விதிகளுக்கு இணங்க பின்பற்றப்பட்டது. இதனையடுத்து அநுரகுமார திசாநாயக்க 57,40,179 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியானார்.
தேசிய மக்கள் சக்தி பதவியைக் கைப்பற்றியபோதும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தகைய நிலையைப் பெறப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சஜித் தரப்பு பிரதமர் பதவியை கைப்பற்றிவிடலாம் என்றும் நம்பியிருந்தது.
அந்த வகையில் இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் 159இடங்களைப் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை தேசிய மக்கள் கட்சி பதிவு செய்தது
தேசிய மக்கள் சக்தி
9ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியல் அடங்கலாக 145 ஆசனங்களைப் பெற்று பெரும் சாதனையை நிகழ்த்தியதாக கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 68 இலட்சம் வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்று நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் என மொத்தமாக 159 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இதுவரை காலத்திலும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினக் கட்சிகள் தோல்வியை தழுவிய நிலையில் இம்முறை வடக்கு கிழக்கிலும் (மட்டக்களப்பு மாவட்டம் தவிர்த்து) தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று அரசியலில் பெரும் கவனத்தை ஈரத்து வெற்றியைப் பதிவாக்கியது.
தமிழர்களின் தனிநாடு குறித்த பிரகடனம் இடம்பெற்ற வட்டுக்கோட்டை தொகுதியிலும் இக் கட்சி வெற்றி பெற்றமையும் அரசியல் ரீதியாக முக்கிய செய்தி வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பெருவெற்றியாகும். கடந்த 2010ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த வேளை பல்வேறு அரசியல் கட்சிகளையும் தன்னுடன் இணைத்து பல அரசியல் முக்கியஸ்தர்களையும் பல்வேறு விதமான அணுகுமுறைகளுடன் இணைத்து தேர்தலில் வென்றபோதும் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை - பெரும்பான்மையை அவரால் பெற முடியவில்லை என்பது இப்போதைய தேர்தல் வெற்றியில் இன்னும் துலக்கமாகியுள்ளது.
இந்த நிலையில்தான் பெரும்பான்மை வெற்றியை வைத்து இலங்கையை புதிய திசையில் திசைகாட்டி கொண்டு செல்லப் போகிறதா? அதாவது மாற்றம் தேவை என்பதற்காக வாக்களித்த மக்களுக்கு பெரும்பான்மையை வைத்து இந்த அரசு மாற்றங்களை உருவாக்குமா? என்பதே இலங்கையிலும் இலங்கை அரசியல் குறித்து உலக நாடுகளிலும் முக்கிய கேள்வியாக தோற்றம் பெற்றுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை
இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் நாடாளுமன்றத்தால் செய்ய முடிந்த சில அதிகாரங்களை பற்றி இங்கு கவனிப்பது பொருத்தமானதாக இருக்கும். அந்த வகையில் ஶ்ரீலங்காவின் அரசியல் அமைப்பை திருத்தி நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த காலத்தின் அரசுகள் வாக்குறுதியை அளித்திருந்தன.
அநுர அரசும் அத்தகைய வாக்குறுதியை அளித்திருக்கிறது. இந்த நிலையில் அரசியலமைப்பையே திருத்துவதற்கு, அடிப்படை உரிமைகள் விதிகள் அல்லது அரசாங்க அமைப்பு, ஜனாதிபதி பதவி அல்லது அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் போன்ற பிற முக்கிய விதிகள் உட்பட, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழியாக மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதேபோன்று இலங்கையில் சட்டங்களை உருவாக்கவும் நீக்கவும் மாற்றவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமானது. சில முக்கியமான சட்டங்களை இயற்றுதல், அரசாங்கத்தின் கட்டமைப்பை பாதிக்கும் அல்லது சட்ட அல்லது அரசியல் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உள்ளடக்கிய சில சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படலாம்.
அந்த வகையில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பன்னாட்டுச் சமூகமும் கவனம் செலுத்தி தமது வலியுறுத்தல்களை பல்வேறு நிலைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றது.
எனவே அநுர அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலை ஆற்றுமா என்பதே அனைவரும் எதிர்பார்ப்பு. நாட்டின் உயர்மட்டச் செயற்பாடுகள் மற்றும் நீதிப்பொறிமுறை தொடர்பான விடயங்களிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியப்படுகிறது.
அரசியலமைப்பு திருத்த
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற சில அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தல், சில தேசிய வாக்கெடுப்புகளை முன்மொழிதல், நாடாளுமன்றச் சட்டங்கள் அதற்கே உரித்தான நடைமுறைக்காக உருவாக்குதல், சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கோ அல்லது குறிப்பிட்ட சட்டத்தை இல்லாதொழிப்பதற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.
அதேவேளை, அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலமொன்றாயின் அச்சட்டமூலத்தின் விரிவுப் பெயரில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டமூலமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கீகாரத்துடனும் நிறைவேற்றப்படலாம்.
அத்துடன் மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு மற்றும் நிதி தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கும் பெரும்பான்மை நிலை மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.
நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவோம் என்றும் ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் புதிய இலங்கையை உருவாக்குதல் என்கிற கோசநிலைகளில் எல்லாம் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரம் அமைந்திருந்தது. அந்த வகையில் நாடு முழுவதும் புதிய அதேநேரம் அதிகளவில் படித்த இளைஞர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பேரம்பேசல்கள், கட்சித் தாவல்கள் என வழக்கமான அரசியல் ஆட்டங்களற்ற ஒரு ஆட்சிச் சூழலை அரசியல் நிலையை இலங்கை எட்டியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின்னால் ஊழலும் அரசியல்வாதிகளும் அடாவடிகளும் அறிவற்ற செயற்பாடுகளும் இருந்த நிலையில், இலங்கையில் இனியாவது மக்களின் வாழ்வில் பொருளாதார சுபீட்சமும் நிறைவும் கொண்ட வாழ்வை அனுபவிப்பர் என்ற எதிர்பார்ப்பையும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரான நிலமைகள் ஏற்படுத்தி உள்ளன.
ஜனாதிபதியாகிய அநுர
இதேவேளை கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அநுரகுமார திசாநயாக்க தரப்பும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு எதிராக பேசியதுடன், அதனை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் கடந்த தேர்தலில் பேசியிருந்தனர்.
இலங்கை தனது இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது என்றும் இந்த ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு பின்னர் நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை பார்க்கமாட்டீர்கள் என்றும் ஜேவிபியின் மத்தியகுழு உறுப்பினர் சுனில்ஹந்துநெத்தி கூறியிருந்தார்.
எனவே அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அநுர அரசு நிறைவேற்றுமா? அதேபோன்று அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதியாகிய பின்னர் அநுரகுமார தெரிவித்தார்.
கடந்த காலத்தின் ஆட்சி புரிந்த இலங்கை அரசுகளும் புதிய அரசியலமைப்பு வழியாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வு முன்வைப்போம் என செயற்பாடுகளை ஆரம்பித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து இந்த மாற்றத்தை அநுர அரசு உருவாக்குமா? இப்படியாக பெரும்பான்மையை வைத்து முன்னேடுக்கப்படும் செயற்பாடுகளே மாற்றமாக அமையும்.
அதுவே மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கும் பலனளிக்கும். திசைகாட்டி அந்த மாற்றங்களை நோக்கி நகருமா? இலங்கை அரசியலில் தனது பயணத்தையும் வெற்றியையும் புதிய சாதனையாக பதிவு செய்யுமா?
இலங்கை என்னும் தேசம், இத்தனை ஆண்டுகளாக இரத்தமும் அதன் வாடையுடனும் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய இனங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், பலன்களும் கிடைக்காமல், நயவஞ்சகத் தனத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இவற்றை இன்னமும் மக்கள் மறக்கவில்லை.
இந்த தேர்தல் முடிவு, ஒட்டுமொத்தமாக மிக முக்கிய மாற்றத்தை கேட்டு நிற்கிறது. அதனை அநுர தலைமையிலான இந்த புதிய அரசு செய்து முடிக்குமா? அல்லது முந்தைய அரசுகள் செய்த அதே அரசியலைத் தான் செய்து காலத்தை கடத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |