வைத்தியசாலையில் பெண் மரணம் - மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்
இலங்கை தனியார் மருத்துவமனையில் நடந்த பயங்கரம் - இளம் பெண் ஒருவர் மரணம் காலியில் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாயின் மரணம் மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் காலி, உலுவிடகவை சேர்ந்த 46 வயதான செவ்வந்தி இல்லன்பெருமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம்
இந்நிலையில் மூன்று சிறப்பு தடயவியல் மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவால் விசாரணை மேற்கொண்டு, மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு, காலி நீதவான் இசுரு நெத்திகுமார, கராபிட்டிய மருத்துவமனை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு பெண் மருத்துவ நிபுணர் அவருக்கு கருப்பை நீர்க்கட்டி இருப்பதைக் கண்டறிந்து அதை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளி வீட்டிற்குச் சென்று ஒரு நாள் கழித்து மீண்டும் நோய்வாய்ப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் சீழ் நிறைந்திருப்பதாகக் கூறி மீண்டும் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நோயாளிக்கு கே.சி.எல் தடுப்பூசி கொடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. 2 தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் நோயாளி ஆபத்தான நிலைக்குள்ளானார்.
இதயம் துடிப்பு
இந்நிலையில் மருத்துவமனையின் வதிவிட மருத்துவரும் மற்ற இரண்டு மருத்துவர்களும் நோயாளியை பரிசோதித்தனர், ஆனால் நிலை மோசமாக இருந்ததால், நோயாளி உடனடியாக கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நேரத்தில், அவரது இதயம் துடிப்பு நின்ற போதிலும் மருத்துவ சிகிச்சையால், அவரது உயிர் காப்பாற்றப்பட்டது, ஆனால் அவரது மூளை செயல்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
எனினும் அவரது கை அழுகியதால், அவரது உயிரை காப்பாற்ற கையை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் நீண்ட போராட்டத்தின் பின்னர் கடந்த 23ஆம் திகதி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
தனியார் மருத்துவமனையில் நடந்த அநீதி குறித்து இறந்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



