கொழும்பு துறைமுக நகரம் குறித்து ஆராயும் வைத்தியர்கள்
தற்போதைய இலங்கை அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர செயற்பட்ட வைத்திய தொழிற்சங்கம் ஒன்று, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர விடயத்தில் தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தை தீவிரமாக புறக்கணித்து வருவதாக அனைத்து தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போதைய இலங்கையின் தலைநகரம் மற்றும் கொழும்பு நகரத்திற்கு அருகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பில், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் விளைவுகள் குறித்த அரசியல் கருத்துக்கள் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சியடையக்கூடும் என, சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக சரியான தகவல்கள் கிடைக்காமையால், பொதுமக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியை, வெவ்வேறு கட்சிகள், வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி இலங்கையின் நீண்ட கால ஸ்தீரத்தன்மையை கேள்விக்குறியாக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட நிலையான வளர்ச்சியின் அடிப்படைக் கூறுகளில் இந்த திட்டத்தின் தாக்கம் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரத்தின் எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் எவை? மற்றும் பொருளாதார ஆணைக்குழு, அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ, விசேட வைத்திய நிபுணர் மைத்திரி சந்திரரத்ன, விசேட வைத்திய நிபுணர் ருவன் பெர்டினாண்டோ, வைத்தியர் நவீன் டி சொய்சா மற்றும் வைத்தியர் சமந்த ஆனந்த ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
கொழும்பு துறைமுக நகரத்தின் சார்பாக தற்போதைய அரசாங்கம் அனைத்து மதங்களையும் தாக்கியுள்ளதாக தேசிய புத்திஜீவிகள் சங்க சபை குற்றம் சாட்டியதோடு, அது நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறுவதாக குறிப்பிட்டிருந்தது. கொழும்பு துறைமுக நகரத்திற்காக நாட்டின் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக மீறுவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்த சுட்டிக்காட்டியிருந்தது.
இதற்கிடையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏப்ரல் 23ஆம் திகதியான இன்றைய தினமும் ஐந்தாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.