கல்முனையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வைத்தியர்: நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
மது போதையில் காரை செலுத்தி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை மோதி விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைக்கவும் நீதிமன்று அறிவித்துள்ளது.
குறித்த விபத்தில் வைத்தியரின் வாகன அனுமதி பத்திரம் காலாவதியாகி உள்ளமை, அபாய நிலையில் வாகனத்தை செலுத்தியமை, மது போதையில் சென்றமை, உள்ளிட்டவைக்காக ரூபா 80 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இளைஞன்
மேலும் பாதிக்கப்பட்ட இளைஞன்(28 வயது) காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |