இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருது!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு மிக உயர்ந்த 'A' மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடும் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கையில், சிறந்த மதிப்பீடாக 'A' தரம் (Central Banker Report Cards 2025) வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கை ஏற்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் அவரது மூலோபாய தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
1994 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கை, கிட்டத்தட்ட 100 நாடுகளில் மத்திய வங்கி ஆளுநர்களின் செயல்திறனை மதிப்பிடுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், நிதி ஸ்திரத்தன்மையைப் பராமரித்தல் மற்றும் அரசியல் தலையீடு இல்லாமல் சுயாதீனமாகச் செயல்படுதல் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் 'A+' முதல் 'F' வரையிலான மதிப்பீடு வழங்கப்படுகிறது.
உயரிய விருது
இந்த முறை 'A+' என்ற அதிகபட்ச மதிப்பீட்டை டென்மார்க், அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் பெற்றுள்ளனர்.
இந்தோனேசியா, சிலி, கென்யா மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுடன் சேர்ந்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் 'A' தரம் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த சியா டெர் ஜீன் மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லெசெத்ஜா ககன்யாகோ ஆகியோருக்கும் 'A' தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச அங்கீகாரத்துடன், உலகின் முன்னணி மற்றும் மதிப்புக்குரிய மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் நந்தலால் வீரசிங்கவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளமை இலங்கை பெற்றுக் கொண்ட தனித்துவமான சாதனையாகும்.



