அபாயம் ஏற்படக்கூடிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்! - பிரித்தானிய மக்களுக்கு பிரதமர் எச்சரிக்கை
விடுமுறை நாட்களில் அபாயம் ஏற்படக்கூடிய பட்டியலில் (Amber list Country) உள்ள நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, அபாயம் ஏற்படக்கூடிய பட்டியலில் உள்ள நாடுகள் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத்தடை நீக்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அம்பர் பட்டியலில் உள்ள இடங்களுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் 150 க்கும் மேற்பட்ட விமானங்கள் திங்கள்கிழமை புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு குறித்து கவலை இருக்கின்ற போதிலும், ஜூன் மாதத்தில் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அபாயம் ஏற்படக்கூடிய பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதானால் “நீங்கள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்” என பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் கோவிட் - 19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் வரைபடத்தின் ஒரு பகுதியாக சர்வதேச பயணம் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
அந்த வகையில் ஒரு போக்குவரத்து திட்ட அமைப்பு தற்போது நடைமுறையில் உள்ளது, இதன்பபடி, கோவிட் தொற்றின் நிலைமையின் அடிப்படையில் பச்சை, அம்பர் மற்றும் சிவப்பு என நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன்படி, பசுமை பட்டியலில் போர்ச்சுகல் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நாடுகளில் இருந்து பிரித்தானியாவில்று திரும்பி வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
எனினும், அந்த நாடுகளுக்கு புறப்படுவதற்கு முன்னரும் மற்றும் பின்னரும் கோவிட் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் அபாயம் ஏற்படக்கூடிய பட்டியலில் (Amber list Country) உள்ள நாடுகளில் இருந்து திரும்பும் மக்கள் திரும்பி வந்தபின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அத்துடன், தொடர்ச்சியாக கோவிட் சோதனைகளை மேற்கொண்டு பயணிகள் locator படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதேவேளை, சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து திரும்பும் பிரித்தானியர்கள் 1,750 பவுண்ட் செலவில் 10 நாட்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதியில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிவப்பு பட்டியலில் இந்தியா, துருக்கி மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.