கோவிட்டால் மரணித்த சிறுமி தொடர்பில் வெளியான தகவல்! பெற்றோர்களுக்கான அவசர அறிவித்தல்
கொவிட் 19 நோய் காரணமாக 12 வயதான சிறுமி ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குறித்த சிறுமி அதீத நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இருந்த போதும் குறித்த சிறுமி அதிக உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், எவ்வாறாயினும் இந்த மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.
உலகின் பல நாடுகள் 5 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. எவ்வாறாயினும் இலங்கையில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கவில்லை. அதற்கான விஞ்ஞானப்பூர்வ தரவுகள் பெறப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
இதேவேளை, சிறார்களுக்கு கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் எவையேனும் இருப்பின் அவர்களைப் பாடசாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அனுப்ப வேண்டாம் என்று வைத்தியர் விஜேசூரிய கோரியுள்ளார்.
மேலும் உரிய மருத்துவ ஆலோசனையின்றி, தமது பிள்ளைக்கு கொவிட் தொற்றியுள்ளதாகப் பெற்றோர் முடிவு செய்துவிட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
