பொருளாதாரத்திற்காக மக்களின் உயிர்களை பலிக்கொடுக்க வேண்டாம் - ரணில் விக்ரமசிங்க
பொருளாதாரம் பற்றி கூறிககொண்டு மக்களின் உயிர்களை பலிக்கொடுக்க வேண்டாம் எனவும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நேற்று சமூக வலைத்தளம் ஊடாக ஆற்றிய விசேட உரையில் இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு மூன்று கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறன.
அனைத்து தடுப்பூசிகளையும் இந்தாண்டில் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். இதனால், நாம் புதிதாக சிந்தித்து புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதலில் அஸ்ரா செனகா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க நாம் முடிந்தளவில் முயற்சிக்க வேண்டும். அரசாங்கமும் தனியார் துறையினரும் முடிந்தளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைவருக்கும் ஒரு வருடத்தில் தடுப்பூசியை வழங்க முடியாது என்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் போது மருத்துவ ஆலோசனை முக்கியமானது.
குறிப்பாக பொருளாதாரம் எனக் கூறி மக்களின் உயிர்களை பலிகொடுக்க வேண்டாம். இலங்கை மத்திய வங்கி பணத்தை அச்சிட்டதன் காரணமாக இலங்கையின் ரூபாய் மதிப்பிழந்தது.
நாங்கள் நவம்பர் மாதம் தடுப்பூசிகளுக்காக 20 கோடி டொலர்களை முதலீடு செய்தோம். அது பிரச்சினையில்லை. அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவழைத்ததால் வைரஸ் பரவல் மேலும் அதிகரித்தது.
அப்படியானால், குழுக்களால் இந்த வேலையை செய்ய முடியாது என்பது எமக்கு தெரிகிறது. நாட்டை முடக்க வேண்டுமாயின் அதேபோல் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும்.
அமைச்சரவையும் ஜனாதிபதியும் அதிகாரத்தை கையில் எடுத்து திட்டங்களை வகுக்க வேண்டும். அமைச்சரவையை தரம் தாழ்த்த வேண்டாம்.
நாட்டிற்கு சுகாதார பாதுகாப்பு பெற்றுக்கொடுக்கும் தேவை எமக்கு உள்ளது. இதற்காக நாம் வேலை செய்வோம். நாட்டையும் மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.