மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வைத்தியரை இடமாற்ற வேண்டாம்: மக்கள் ஆர்ப்பாட்டம் (Video)
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் லசித் திலகரட்ணவை இடம்மாற்ற வேண்டாம் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் இன்று இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நோயாளர்களின் கஷ்டத்தைத் தெரிந்த வைத்தியர் வேண்டும், நோயாளர்களின் நோய் பற்றிச் செவிமடுக்கும் வைத்தியரை இடமாற்றதே, எங்கள் வைத்தியர் எங்களுக்கு வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாகக் கடமையாற்றி வரும் இவர் தமது கடமை நேரத்தை விடவும் மேலதிகமாக வைத்தியசாலையை அழகுபடுத்துவதிலும், அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கரிசனை காட்டி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மகஜர் கையளிப்பு
இதுவரை காலமும் வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் தற்போது குறித்த வைத்தியரின் முயற்சியினாலும், பொதுமக்களின் உதவியுடனும் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் குறித்த வைத்தியசாலையில் தற்போது கடமையாற்றி வரும் வைத்தியர் லசித் திலகரட்ணவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அந்த இடமாற்றத்தை உரிய திணைக்கள அதிகாரிகள் இரத்து செய்யுமாறும் கோரி கிழக்கு மாகாண ஆளுநருக்கும், திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கும் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் டபிள்யூ.ஜகத் வேரகொடவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.



