அதள பாதாளத்தை நோக்கி செல்லும் நாடு - நிதி அமைச்சு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்
அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று (07) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 2022ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குள் தங்கள் செலவினங்களை நிர்வகிக்கவும், மேலதிக ஏற்பாடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் எனவும் அமைச்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த நிதியிலிருந்து எரிபொருள் கொடுப்பனவுகளை பெறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதாந்தம் 5 லீற்றர் அல்லது அதற்கு சமமானதாக குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார செலவை 10 சதவீதம் குறைக்கும் முறைகள் உருவாக்கப்படும். மேலும், வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கமைய, ஏற்கனவே உள்ள அலுவலக கட்டிடங்கள் மற்றும் புதிய அலுவலகங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு அரச நிறுவனங்களுக்காக வாகனங்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்படும். நிறுவனங்களின் செயல்பாட்டிற்காக அத்தியாவசிய பணியிடங்களில் வெற்றிடங்களை நிரப்புவதைத் தவிர, ஒருங்கிணைந்த நிதியத்தின் மூலம் நிதியளிக்கப்படும் நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்களை வாடகைக்கு பெறக்கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஒதுக்கீடு இன்றி பெறப்பட்ட கட்டடங்களுக்கு வாடகை செலுத்துவதற்கு நிதி வழங்க வேண்டாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாக்கள் அரச நிதியைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கக் கூடாது. மேலும், 2022-01-12 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிதிச் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொலைபேசிச் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.