நாடளாவிய ரீதியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடத் தயாராகும் மக்கள் (Photos)
மலரவுள்ள தீபாவளி பண்டியிகையினை கொண்டாடுவதற்கு நாடளாவிய ரீதியில் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து பல்வேறு தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசிய பொருட்களின் விலைகளும் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளது.
மலையகம்
கடந்த காலங்களை போல் ஆடம்பர பொருட்களுக்கு முக்கியத்துவமளிக்காது இம்முறை தீபாவளியினை கடமைக்கு முக்கியத்துவமளித்து கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்துவருவதாக மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இன்று அட்டன் நகரில் அத்தியவசிய பொருட்களையும் பூசைப்பொருட்களையும் உடைகளையும் கொள்வனவு செய்வதற்காக ஏராளமான பொது மக்கள் வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அத்தியவசிய பொருட்கள் உள்ள கடைகளிலும், மரக்கறி கடைகளிலும், நகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
“அரசாங்கம் ஒரு சில அத்தியவசிய பொருட்கள் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஹட்டன் நகரில் உள்ள பல கடைகளில் இந்த பொருட்களுக்கு குறைக்கப்படவில்லை. எனவும் குறிப்பாக சத்தோச நிலையங்களில் கூட குறைக்கப்பட்ட அளவு குறைக்கவில்லை” என்றும் பொது மக்கள் குற்றம் சுமத்துயுள்ளனர்.
இது குறித்து விலைகட்டுப்பாட்டு அதிகாரிகள் சபை மற்றும் நுகவோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எவ்வித கவனமும் எடுப்பதில்லை என்றும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவை, டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று தீபாவளி கொண்டாத்திற்கான பொருட் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டனர்.
சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்து.
கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்கள் இன்று தமது வீடுகளை நோக்கி திரும்பினர். இதனால் பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
மேலதிக செய்தி: திருமால்
யாழ்ப்பாணம்
தீபாவளிப் பண்டிகை நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கோவிட்டிற்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகின்றது.
புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அங்காடி வியாபாரமும் எதிர்பார்த்த அளவிற்கு களைகட்டவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி:கஜிந்திரன்