மரண வீட்டில் அரசியல்..
‘டிட்வா’(Ditwah) புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுக்க முழுக்க அரசாங்கமே பொறுப்பு என்றவாறான விமர்சனங்கள் பலரால் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
அதுமட்டுமன்றி இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை அரசாங்கம் படுகொலை செய்து விட்டது என்றும், அதன்மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் அரசியல் மேதாவிகள் சிலர் கருத்துரைத்ததையும் காணமுடிந்தது.
மக்களுக்கான பணி
இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் வழமையாகவே அரசுக்கெதிரான கருத்துக்களை மட்டும் பதிவிடுபவர்களுமாக உள்ளனர். ஆனால் உண்மையில் களப்பணிகளில் ஈடுபட்டுவரும் எவரும் இதுவரை அரசாங்கத்தைக் குற்றஞ் சாட்டவில்லை.
ஏனெனில் அவர்களுக்கு அதற்கு நேரமுமில்லை என்பதற்கு அப்பால் அதைவிட அவர்களுக்கு முக்கியமானது மக்களுக்கான பணி செய்வதே. இப்புயல் தொடர்பான முன்னாயத்தங்களை உரியநேரத்தில் அரசாங்கம் எடுத்திருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என்பது ஒரு கருதுகோள் மட்டுமே.

அது உண்மையாக அமைந்தாலும்கூட அதைப்பற்றிக் கதைக்கும் நேரம் இதுவன்று. அனைவரதும் உடனடிக் கடமை பாதிக்கப்பட்ட மக்களையும் நாட்டையும் மீட்டு பழைய நிலைக்கு நகர்த்துவதாகும்.
விபத்தொன்றில் சிக்கி ஒருவர் உயிருக்குப் போராடும்போது யாரில் தவறு, அப்படி நடந்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது, மற்றவருக்கு இது பாடமாக இருக்கட்டும் என்று கூறுகிறேன் என்ற விவாதங்களைவிட, முதலில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற முனைவதே முக்கியமானது.
நேற்றைய நாளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ்க் கட்சிகளும் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தது சரியானதா? உண்மையில் இவ்வாறான நிலைமைகளில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி ஒன்றாகப் பயணிப்பதே அவசியமானது.
தமிழ் அரசியல்வாதிகள்
எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு அரசாங்கம் முக்கியமளிக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே.
ஆனால் என்ன நடந்திருக்கும். எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பதிலும் அரசாங்கம் அதற்கு மறுத்தான் கொடுப்பதிலும் ஒரே களேபரமாக மூன்று நாட்களும் கடந்திருக்கும். இங்கு யாரும் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.களப்பணிகள் மேலும் தாமதம் அடையும் நிலையும் விரக்தி நிலையுமே மேலோங்கியிருக்கும்.
அரசாங்கத்தின் மீது எல்லாவற்றுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ்த் தேசிய வாதிகளாகத் தம்மைக் கருதிக் கொள்வோருக்கும் அது தொடர்பான மீளாய்வு ஒன்று அவசியமா? அரசாங்கத்தை எதிர்க்கும் சிங்களக் கட்சிகளினதும் தமிழ்க்கட்சிகளினதும் நோக்கம் ஒன்றாக இருக்க முடியாது.
அவர்களது நோக்கம் அடுத்தமுறை ஆட்சி தொடர்பானது.
ஆனால் தமிழ் அரசியலின் நோக்கம் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பானது. அண்மைய திரிகோணமலை விவகாரத்தில் அவர்களின் வெளிப்பாடு பிந்திய உதாரணம்.
எனவே எந்த நேரத்தில் யாருடன் நிற்பது?(எதிர்க்கட்சி அல்லது அரசாங்கம்)அல்லது யாருடனும் இல்லாமல் நிற்பது என்பது பற்றிய தெளிவு அவசியம். இது தமிழ்த் தேசிய வாதிகளாகத் தம்மைக் கருதும் மற்றவருக்கும் பொருந்தும்.
ஜே.வி.பியின் கடந்தகாலம்
இவ்விடயம் தொடர்பாக முகநூலில் பதிவிடப்படும் எதிர்மறையான கருத்துக்களையும் பார்க்க முடிகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வழமையாகவே அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைப்பவர்களுடையவை.
இவ்வாறானவர்கள் கருத்துகளில் உண்மையிருந்தாலும்கூட, முதலை முதலை என்று சும்மா சும்மா கத்தி ஏமாற்றியவனுக்கு இறுதியில் முதலை வந்தபோது ஏற்பட்ட நிலைதான். சில நண்பர்கள் ஜே.வி.பியின் கடந்தகால தமிழர் விரோதச் செய்திகளை மீள்பதிவேற்றி தமது ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் தீர்த்துக் கொள்வதையும் காணமுடிகிறது.

ஜே.வி.பி உட்பட ஏனைய சிங்களக் கட்சிகள் மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைவர்களின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு மிக அவசியம். ஆனால் அவற்றைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
பதிலாக அந்த எச்சரிக்கையை மனதில் வைத்து சமகால நிலைமைக்கு ஏற்ப அரசியலை அணுகுவதுதான் அறிவுபூர்வமானதாக அமையும். கடந்த காலத்தைவிட நிகழ்காலமும் எதிர்காலமும் முக்கியமானவை.
ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எதிராக இருந்ததைப் போலவே இந்தியாவுக்கும் எதிராக இருந்தது. ஆனால் அனர்த்தத்தின் போது உடனடியாக உதவிக்கு வந்தது இந்தியா. ஏனெனில் கடந்த காலத்தைவிட நிகழ்காலத்தை தமக்கு சாதகமாக மாற்றுவதற்கான முனைப்பு அது.