யாழ்.மாவட்டத்தில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள்(Photos)
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் இன்றையதினம் (31.05.2023) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையடப்பட்டுள்ளன..
முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீட்டர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டணமீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டண மீட்டர் பொருத்துவதற்கான கட்டணத்தினை அந்தந்த நிறுவனத்துடன் கலந்தாலோசித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதனைப் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறும், கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை
யாழ்.மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் உறுதியளிக்கப்பட்டது. மேலும் கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இந்த கூட்டத்தில் யாழ்.மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
விசேட குழு
வடக்கு மாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானம் ஒன்று கிடப்பில் உள்ளது.
அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக எனது (சி.வி.கே.சிவஞானம்) தலைமையில் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர் பிரதமர் செயலாளர், நீர்பாசன பொறியியலாளர் களப்பணிப்பாளர் உட்பட ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குள நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதோடு நாளை மறுதினம் (03.06.2023) முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் மற்றும் அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டாக்காலி நாய்கள் தொடர்பான நடவடிக்கை
யாழ்.மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் அதிகரிப்பால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாநகர சபை மட்டும் தனித்து செயலாற்ற முடியாததுடன், சமகாலப் பகுதியில் அனைத்து பிரதேச சபைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை உள்ளிட்ட சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தொகையை கூடுதலாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென டக்லஸ் தேவாநந்தா தெரிவித்தார்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் கால்நடைகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்த நிலையில், தனக்கும் இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் உரிய ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.









