போலித் தகவல்களுடன் கோதுமை மா பொதி விநியோகம்: நீதிமன்றில் வழக்கு தாக்கல் (Photos)
போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மாவினை விநியோகித்த முகவருக்கு எதிராக, வவுனியா ஊடக அமையத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்குத் தாக்கல் நேற்று (27.10.2022) செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் நலன்கருதி வவுனியா ஊடக அமையத்தால் கடந்த 21ஆம் திகதி வவுனியா பாவனையாளர் அதிகார சபை மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலித் தகவல் குறிப்பிடல்
பதிவு எதுவும் செய்யப்படாத போலியான பெயர் மற்றும் நிரந்தர தொலைபேசி இலக்கமின்றி, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் கைத்தொலைபேசி இலக்கத்துடன் கோதுமை மா பொதி செய்யப்பட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பொருளை இவ்வாறு போலியான முகவரியுடன் விற்பனை செய்வதால் அதன் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என பொது மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், வவுனியா ஊடக அமையத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
ஊடக அமையத்தின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் குறித்த கோதுமை மா பொதிகளை வர்த்தக நிலையங்களில் இருந்து பெற்று அதனை வர்த்தக நிலையங்களுக்கு விநியோகித்த முகவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
