போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம்:எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம்
கொழும்பு காலிமுகத்திடல் கோட்ட கோ கம போராட்ட களத்தில் இருந்து போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக விவாதம் நடத்த நாடாளுமன்றத்தை நாளைய தினம் கூட்டுமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதில் காணப்படும் சிக்கல் மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பவற்றால் செயற்பாட்டு ரீதியாக நாடாளுமன்றத்தை நாளைய தினம் கூட்டுவது சிரமம் எனவும் இதனால், அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, இந்த விவாதத்தை நடத்தலாம் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
போராட்டகாரர்களை தாக்கி விரட்டுவது சட்டவிரோதம்
எவ்வாறாயினும் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாத்திரம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவது என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
போராட்டகாரர்களை தாக்கி, விரட்டியடிப்பது சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கை என்பதால், அது தொடர்பாக விவாதம் நடத்தப்படுவது மிக முக்கியமானது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.