மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரின் பதவி நீக்கம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை பதவி நீக்கம் செய்யும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayaka) தனது ஓய்வு ஆவணங்களை சமர்ப்பித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீதியரசர் கருணாரத்ன 2025ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனது கடமைகளில் இருந்து விலக உள்ள போதிலும் அவர் 63 வயதை எட்டியவுடன் எதிர்வரும் ஜூன் 16 அன்று ஓய்வு பெறவுள்ளார்.
இந்தநிலையில், நீதியரசர் கருணாரத்ன கடமைகளில் இருந்து விலகுவதற்கான முடிவைக் கருத்தில் கொண்டு, அவரை பதவி நீக்கம் செய்யும் திட்டங்களை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தின் கவனம்
அதன்படி, அவர் அதிகாரப்பூர்வமாக 2025 ஜூன் 16ஆம் திகதி அன்று ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார். இதற்கிடையில் நீதியரசர் கருணாரத்ன பெப்ரவரி முதலாம் திகதி முதல் கடமைகளில் இருந்து விலகுவதற்கான தனது முடிவு குறித்து அனைத்து நீதியரசர்களுக்கும் ஏற்கனவே விளக்கியுள்ளார்.
இந்தநிலையில் நீதியரசர் கருணாரத்ன ஓய்வு பெறும் வரை, தற்காலிக தலைவராக பணியாற்ற மற்றொரு மூத்த நீதியரசரை நியமிப்பது குறித்து அரசாங்கத்தின் கவனம் இப்போது செலுத்தப்பட்டுள்ளது. நீதிபதி கருணாரத்னவுக்குப் பிறகு மேன்முறையீட்டு நீதிமன்றில் மூத்த நீதியரசராக முகமது லஃபார் உள்ளார்.
எனினும் அவர் ஜூன் 18ஆம் திகதியன்று 63 வயதை எட்டுவதால் அவரை உயர்நீதிமன்றுக்கு ஜனாதிபதி பரிந்துரைக்கவில்லை. இதற்கு அடுத்தப்படியாக, உதய கரலியத்த, ரத்னபிரிய குருசிங்க மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடுத்த மூத்த நீதியரசர்களாக உள்ளனர்.
இதற்கிடையில், புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உயர் நீதிமன்ற நீதியசர்களை வரவேற்கும் சம்பிரதாய அமர்வு புதன்கிழமை உயர்நீதிமன்ற வளாகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும்.
நீதியரசர்கள் சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் அபயகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் கடந்த வாரம் ஜனாதிபதி திசாநாயக்க முன் புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவியேற்றனர்.
பரிந்துரை
இதனை தவிர மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட சரத் திசாநாயக்க மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோரை வரவேற்கும் சம்பிரதாய அமர்வு செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும்.
முன்னதாக, உயர்நீதிமன்றத்தின் வெற்றிடங்களை நிரப்பும்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையை அரசாங்கம் புறக்கணித்தது. உயர்நீதிமன்ற வெற்றிடங்களில் ஒன்றை நிரப்ப, மேலதிக மன்றாடியார் நாயகம் சுசந்த பாலபட்டபெந்தியை சட்டமா அதிபர் பரிந்துரைத்திருந்தாலும், அவரது பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையின் பரிசீலனைக்காக அனுப்பவில்லை.
இதற்கிடையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அடுத்ததாக நியமிக்கப்படவுள்ள மூத்த மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் ஆவார். இருப்பினும், அவர் 60 வயதை எட்டியவுடன் இன்று 19ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார்.
இதனையடுத்து மூப்பு அடிப்படையில், கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நாமல் பண்டார பலல்லே மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரேமசங்கர் ஆகியோர் அடுத்த வரிசையில் உள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்காக, அரசியலமைப்பு பேரவையின் பரிசீலனைக்காக மூத்த துணை மன்றாடியார் நாயகம் லக்மாலி கருணாநாயக்க மற்றும் மூத்த துணை மன்றாடியார் நாயகம் சுதர்சன டி சில்வா ஆகியோரின் பெயர்களையும் சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |