அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த கப்ரால்! உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி
தடயவியல் கணக்காய்வு தொடர்பில் மத்திய வங்கியின் பிரதான அதிகாரியாக செயற்பட்டவரும், பிணை முறி மோசடி விவகார குற்றவியல் விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட்டவருமான கே.எம்.ஏ.என்.தவுலக, மத்திய வங்கியின் நிதிச் சபை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநராக, அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்று இரு நாட்களுக்குள்ளாகவே அவர் இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு விசாரணைகளின் பிரகாரம் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ( 2005 - 2015) ஆகியோருடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் கே.எம்.ஏ.என். தவுலகவின் பொறுப்பிலேயே இருந்து வந்தது.
இவ்வாறான நிலையிலேயே, அவர் நிதிச் சபையின் செயலர் பதவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றவியல் விசாரணை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்துடனும் இணைந்து செயற்பட்டவர் தவுலகல என்பதுடன், அவரின் நீக்கமானது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.