மன்னாரில் தேர்தல் ஆணைக்குழுவுடன் பஃவ்ரல் அமைப்பு இணைந்து கலந்துரையாடல்
வாக்கெடுப்பு நிலையங்களுக்கான உட்பிரவேசித்தல் வசதி மற்றும் அதன் தன்மை தொடர்பாக தேர்தல் ஆணைக் குழுவுடன் பஃவ்ரல் அமைப்பு இணைந்து மேற்கொள்ளும் ஆய்வுக்காக மன்னார் மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்றைய தினம் (15) மன்னாரில் இடம் பெற்றது.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுடன் பஃவ்ரல் அமைப்பு இணைந்து இலங்கையில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 1500 வாக்கெடுப்பு நிலையங்களின் தன்மை,வாக்கெடுப்பு நிலையங்கள் இயலாமைக்கு உட்பட்ட நபர்கள் பிரவேசிப்பதற்கு தேவையான வசதிகளை கொண்டுள்ளதா, மேலும் வாக்கெடுப்பு நிலையங்கள் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தரவை சேகரிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகின்றது.
தெளிவூட்டல்
குறித்த மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும்.மேலும் இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சிவில் சமூக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 9.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை நடைபெற்றது.
வாக்கெடுப்பு நிலையங்களை தெரிவு செய்வதற்காக கையாளப்படும் உத்திகள் மற்றும் வாக்கெடுப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்படுகின்ற விதம் தொடர்பாக தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் 2026-2029 மூலோபாய திட்டம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கே.முகுந்தன்,பஃவ்ரல் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுஜீப கஜநாத் ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






