முல்லைத்தீவு மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பாக தேசிய வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(15.06.2026) முல்லைத்தீவு செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
முக்கிய தீர்மானம்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஒழுக்குபடுத்தலிலும் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க பங்கேற்புடனும் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டுத்திட்டம் இல்லாதோர் விபரங்கள், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளின் விபரங்கள், வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்காலத்தில் தேவையான வீடுகள் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வீடுகள் வழங்கப்படும் எனவும், களுத்துறை மாவட்டத்திற்கு வழங்கவேண்டிய 100 வீடுகளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கியுள்ளதாகவும், வீட்டுத்திட்டம் தொடர்பில் ஒவ்வொரு கிராம பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும் மேற்பார்வையுடனும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், எந்தவித பக்கச்சார்புகளுமின்றி வீட்டுத்திட்டங்கள் வழங்கவேண்டும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகள் அமைக்கும் போது அதனை பரிசீலனை செய்து பலமான முறையில் அமைக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகள், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




