கிளிநொச்சியில் இடம்பெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(01.11.2023) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
திட்ட உள்ளடக்கங்கள்
அஸ்வெசுமா நலன்புரி நன்மைகள் சபையின் திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களை வலுவூட்டும் நோக்கில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறியிருந்தார்.

மேலும், திட்டம் தொடர்பான அறிமுகத்தினைத் தொடர்ந்து துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் குறித்த திட்ட உள்ளடக்கங்கள் தொடர்பான கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயரதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சி.சத்தியசீலன், சந்தைப்படுத்தல் பணிப்பாளர் கீத்ஸ்ரீ, சிரேஷ்ட முகாமையாளர் சுனில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளிட்ட துறைசார்ந்த பல திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.