முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்புக்களுடனான கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்ட சமூகமட்ட விவசாய அமைப்புக்களுடனானவடமாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இன்று (22-06-2022) பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேரடியாக வும் செயலிமூலமும் நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு வெளிப்பாடாக இன்றைய தினம் வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட சமூகமட்ட விவசாய அமைப்புக்களுடனான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இணையச் செயலி மூலம் இடம்பெற்ற குறித்த இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி திரு.ரீ.கனேசநாதன் கலந்து சிறப்பித்ததோடு விவசாய அமைப்புக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
இதன்போது விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் இரசாயன உரமின்மை இதனால் விளைச்சல் குறைவு. கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளுக்கு தட்டுப்பாடு, குளங்கள் சீரின்மை, எரிபொருள் பிரச்சினை எனப் பல்வேறு விடயங்களைத் தெரிவித்தனர்.
இதன்போது கருத்ததுத் தெரிவித்த பொதுமக்கள் தொடர்பு அதிகாரி இவற்றை உரியவர்களுடன் பேசி முடிந்தளவு விரைவாக தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து விவசாயத்தினை முன்னேற்ற இயன்ற முயற்சியினை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் , பிராந்திய விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.