ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் குறித்து கலாசார அமைச்சருடன் கலந்துரையாடல் (Photos)
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது மற்றும் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவது தொடர்பான முக்கிய கூட்டம், கலாச்சார அலுவல்கள் மற்றும் புத்தசாசன அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் ஹஜ் செல்வோருக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து இன்று இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள்
இதில், சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷர்ரப் முதுநபீன், மர்ஜான் பளீல், காதர் மஸ்தான், பைஸல் காஸிம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஹஜ் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வதில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிகளவான நிதி வௌிப்பாய்வதில் உள்ள நிலைமைகள் பற்றியும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
எனினும் இந்த கூட்டத்தில் ஹஜ்ஜூக்கு அனுப்புவது சம்பந்தமாகச் சாதகமான முடிவு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



