கிளிநொச்சியில் காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு தடை செய்யப்பட்ட காணிகளை மீண்டும் விடுவிப்பதற்கு கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மக்கள் பிரதிநிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்று (25.10.2023) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, மேலதிக அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளாக சிவஞானம் சிறீதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவினையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள்
யுத்தம் காரணமாக பல வருடங்கள் மக்கள் இடம்பெர்ந்திருந்த நிலையில், மக்கள் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் காடுகளாக மாறியிருந்தன.
இந்நிலையில், யுத்தத்தின் பின்னர் காடுகளாக காணப்பட்ட காணிகள் அனைத்தும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டதுடன், மக்கள் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் மற்றும் விவசாய,
நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பொருத்தமான இடங்களையும் விடுவிப்பதற்கு தொடர்
முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தற்போது கணிசமான காணிகள் விடுவிக்கப்படுவதற்கு
கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பிலிருந்து ஜனாதிபதியின் வட மாகாணத்துக்கான செயலாளர் இளங்கோவன் காணி, வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




