காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு! கிளிநொச்சியில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
முன்னைய அரசியல்வாதிகள் முயற்சி செய்திருந்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(19) காணாமல் போனவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சக வாழ்வு வேண்டும்..
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
கடந்த கால அரசியல்வாதிகள், முயற்சி செய்திருந்தால் காணாமல் போனோர் விவகாரத்தில் தீர்வை கண்டிருக்க முடியும். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், சக வாழ்வு, நல்லிணக்கம், ஒற்றுமை என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு முடியாமல் போயிருக்கின்றது.
எமது அரசாங்கம், இது தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக பார்க்கின்ற எந்த ஒரு சந்தர்ப்பங்களுக்கும் இனி இடமளிக்கப் போவதில்லை. அனைவரும் ஒன்றாகவே கருதப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்ததாக தெரிவித்து ஆட்சிக்கு வந்தாரே தவிர, இந்த அலுவலகங்களை செயல்படுத்தவிடவில்லை. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களினுடைய அழுத்தங்கள் காரணமாகவே இந்த அலுவலகங்கள் பேரளவில் ஆரம்பிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், இளங்குமரன் மற்றும் அமைச்சின் செயலாளர், காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்டங்களில் சேவையாற்றுகின்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களினுடைய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.






