மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் : இடஒதுக்கீடு உயர்த்த கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் விசேட கோரிக்கையின் பேரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று (16.03.2026) அரசியல் பணிமனையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம்
இதன்போது, மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்கள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்பதையும், ஒன்றியத்தின் பணிகளை வினைத்திறனாக முன்னெடுக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தர அலுவலகம் ஒன்றின் அவசியத்தையும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நிகழ்வுகளில் தங்களை அடையாளப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையின் அவசியம், அரசாங்க ஆட்சேர்ப்பில் தற்போது வழங்கப்படும் 3 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டியதின் அவசியம் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது உறுதி
இந்தக் கலந்துரையாடல் குறித்து கருத்துத் தெரிவித்த ஒன்றியப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து இவ்வாறான சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி விடயங்களை செவிமடுத்த இ. சிறிநாத், எதிர்காலத்தில் பிரதேச செயலக மட்டங்களில் கூட்டங்களை நடத்தி உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலதிக விடயங்கள் தொடர்பாக நாடாதளுமன்றக் குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நாடாளுமன்றத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் ஞா. ஶ்ரீநேசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
