வடக்கு,கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் நாளுக்கு நாள் நில ஆக்கிரமிப்புக்கள்: சுமந்திரன் (Video)
நில ஆக்கிரமிப்புக்களிற்கு எதிராக கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு,கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்களிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசாள் மண்டபத்தில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களிற்குத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் நாளுக்கு நாள் நில ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக நாங்கள் போராடவேண்டி உள்ளது.
அரசு நிலங்களைச் சுவீகரிக்கும் நோக்கில் நில அளவையாளர்களைக் கொண்டு அளவீடு செய்ய முற்படும்போது அந்த இடங்களில் மக்கள் கூடி எதிர்ப்பினை தெரிவித்து அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர். இனிவரும் காலங்களில் அரசுக்குக் கால அவகாசங்களை வழங்குவதில்லை என்ற முடிவினையும் நாங்கள் எடுத்துள்ளோம்.
அதேபோல் இந்த நில ஆக்கிரமிப்புக்களிற்கு எதிராகக் கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டும். இன்றைய கலந்துரையாடலில் அதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக எதிர்வரும் 6ம் திகதி இது தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தீர்மானம் எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.



