யாழ். மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கை..
வேலணை, ஊர்காவற்றுறை ,காரைநகர் ,யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் ,சங்கானை ,கோப்பாய், சாவகச்சேரி ,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 231 குடும்பங்களை சேர்ந்த 746 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்த நிலவரம்
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் யா/போக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை கோப்பாய் பிரதேச செயலகத்திலே 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அதேவேளை அரியாலை உவர் நீர் தடுப்பணையில் 30 கதவுகளும் தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணையின் 10 கதவுகளும் அராலி உவர் நீர் தடுப்பணையில் முழுமையாக 10 கதவுகளும் திறக்கபட்டுள்ளது.
தேவைக்கேற்ற வகையில் கதவுகள் திறப்பதற்குரிய தயார்நிலையில் நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவு பிரதேசத்தில் மாவலித்துறை வீதி பொதுப்போக்குவரத்து மேற்க்கொள்ள முடியாதவாறு முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் நேற்றுமுன் தினம்(26) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுவிக்கப்பட்ட 0.75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலிருந்து அவசர வெள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்காக பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.