பிரித்தானிய வரவு செலவுத் திட்டத்தில் ஏமாற்றம்! - லண்டனில் வாழும் இலங்கை தமிழ் பெண் ஆதங்கம்
பிரித்தானியாவில் வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக பாதுகாப்பு, வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு கூடுதல் நிதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
2019ம் ஆண்டு போரிஸ் ஜோன்சன் பிரதமராக பதவியேற்ற போது சமூக பாதுகாப்பு சீர்திருத்தத்திற்கு உறுதியளித்திருந்தார், எனினும் இந்த ஆண்டு இறுதி வரை திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், லண்டன் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றும் இலங்கை தமிழ் பெண் ஒருவர், சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.
22 வயதான இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரெபேக்கா சின்னராஜா என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.
லண்டன் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றும் இவர் இங்கிலாந்து அழகிப்போட்டியிலும் பங்கேற்க இருக்கிறார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“எங்கள் கடின உழைப்புக்கான பலன் இப்போதாவது கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன், குறிப்பாக, இந்த கோவிட் பரவலின் போது தாதியர்கள் கடினமாக உழைத்தும், எப்போதும் போல் ஊதிய உயர்வு விடயத்தில் எங்களை கைவிட்டுவிட்டார்கள்.
தாதியர் என்பது என் தொழில், அதை நான் நேசிக்கிறேன், ஆனால் எங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி, மக்கள் வைத்தியசாலை ஊழியர்களுக்காக கை தட்டவேண்டும் என நான் விரும்பவில்லை, எங்களுக்கு நியாயமான ஊதியம் வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.