நத்தார் தினத்தில் சிறைக் கைதிகளுக்கு நேர்ந்த ஏமாற்றம்!
கடந்த நத்தார் தினத்தில் வழமை போன்று சிறைக் கைதிகள் எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படாத நிலையில் சிறைக்கைதிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய போயா தினங்கள், சுதந்திர தினம், நத்தார் தினம், சிறைக் கைதிகள் தினம் என்பவற்றில் இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகின்றது.
சிறைக்கைதிகள் தொடர்பில் கடும் அதிருப்தி
இந்நிலையில் கடந்த வெசாக் போயா தினத்தில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அரசாங்கத்தின் பொதுமன்னிப்பைப் பயன்படுத்தி முறைகேடான வழியில் மூன்று சிறைக்கைதிகளை விடுவித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி, கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான தகவல்களை சிறைக்கைதிகள் தங்கள் உறவினர்கள் ஊடாகவே ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர்.
அதன் காரணமாக சிறைச்சாலை திணைக்கள உத்தியோகத்தர்கள் சிறைக்கைதிகள் தொடர்பில் கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்துடன் உள்ளனர்.
அதன் காரணமாக இம்முறை நத்தார் தினத்தில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகளின் பட்டியலை தயாரிப்பதில் சிறைச்சாலை நிர்வாகம் வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளது. அதன் காரணமாக நத்தார் தின பொதுமன்னிப்பை எதிர்பார்த்திருந்த கைதிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் தினமொன்றில் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |