சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO)
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பல்வேறு கௌரவிப்பு நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக மாற்றுத்திறனாளிகளின் 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் நேற்று(03) காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.
புதிய வாழ்வு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பிலும் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மாதர் அமைப்பின் ( WOWD) ஒழுங்குபடுத்தலிலும் இந் நிகழ்வு இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ளது.
கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகள் 60 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகள் 40 பேருமாக மொத்தம் 100 பேருக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அத்துடன், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் மூன்று பேருக்கும் 10000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எழுகை மாற்றுத் திறனாளிகளின் நிலையத்தில் மதியம் 2.00 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கான மற்றுமொரு நிகழ்வும் இடம்பெற்றது.
மன்னார்
சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ”மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய இந் நூல் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
மாந்தை மேற்கு வீகான் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வெற்றிச் செல்வி சந்திரகலாவின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, நூலாசியரும், ஊடகவியலாளருமான பி.மாணிக்கவாசகத்தின் சேவையினை பாராட்டி மாந்தை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு 'காலத்தின் குரல்' என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளனர்.
இந் நிகழ்வில் இயலாமையுடைய மக்களுக்கான தேசிய சபை அங்கத்தவர் வெ.சுப்பிரமணியம், மன்னார் எச்.என்.பி.வங்கி முகாமையாளர் வடிவழகன், தமிழ்மணி கலாபூசணம் மேழிக்குமரன், உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி ஓய்வுநிலை உப பீடாதிபதி ந.பார்த்தீபன் இவர்களுடன் தேசிகன் மற்றும் உயிரிழை அமைப்பின் அங்கத்தவர்கள் பொதுமக்கள் என என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகள் : தீசன்
மட்டக்களப்பு
மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தானா முனை மியானி மண்டபத்தில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"ஊனமுற்ற நபர்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான கோவிட் - 19 இற்குப் பிந்தைய உலகம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைய இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள மாவட்டமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான சேவையினை வழங்கும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் தொழில் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்று ஒழுங்குகளையும் பரீட்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள். இன்று அவர்களை நாங்கள் மற்றவர்களுடன் ஒன்றிணைத்திருக்கின்றோம்.
எதிர்காலத்தில் நாட்டுக்கு முன்னுதாரணமாகவும் பொருளாதார ரீதியில் பங்களிப்பு செய்ய வேண்டிய தேவையும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கின்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரித்திருந்தாலும் அடுத்த வருடத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவுக்காக கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் 12கோடி ரூபா மேலதிகமாக திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது.
நோய் தொடர்பானவர்களை பொறுத்தவரையில் 500 ரூபாவாக வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவுகள் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் காசநோய், கிட்டினி, புற்றுநோய் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட 500 ரூபாய் கொடுப்பனவுகளும் 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்வதற்கும் தலைமைத்துவங்களை பெற்றுக்கொள்வதற்குமாக தயார்படுத்தல்களை மாற்றுத்திறனாளிகள் முன்கொண்டு செல்ல வேண்டும்.
அதற்காக மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசார்பற்ற நிறுவனங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் , ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.மேனகா உள்ளிட்ட திணைக்களம் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகள் : குமார்
மாந்தை கிழக்கு
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் நேற்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
பாலிநகர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் தம்பிமுத்து சிவனடியான் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மாந்தை கிழக்கு உதவி பிரதேச செயலாளர், மல்லாவி பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர், மதகுருமார், CPR திட்ட முகாமையாளர்கள், மற்றும் மாற்று வலுவுள்ள உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


