நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் (PHOTOS)
திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்மாண பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானய தெரிவித்துள்ளதாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் புஷ்பரட்ணம் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானவிக்கும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தான தலைவர் ஆகியோருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்போன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலாநிதி ஆறு திருமுருகன் மேலும் தெரிவிக்கையில்,
கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் மூன்று கோவில்கள் நீண்ட காலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன.

எனவே அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்.
கீரிமலை சமாதிகள்
அதேபோல் கீரிமலையில் சமாதிகள் சிலவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த நிலையில் வேறு சில கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன.
எனவே அந்த விடயங்களை நிறுத்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம்.எனினும் திருகோணமலை விடயம் தொடர்பில் உடனடியாக தான் அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை பெற்று தரமுயற்சிப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.